"நான் அடிச்சா தாங்க மாட்ட... நாலு நாளு தூங்க மாட்ட..." இந்த பாடல்தான் விஜய் ரசிகர்களின் அன்றாட ஆலாபனை ஆகியிருக்கிறது. இதில் இன்னும் ஒரு ஸ்பெஷல், அவரது மகன் சஞ்சய் ஆடியிருப்பதுதான்! விஜய்க்காக சங்கர் மகாதேவன் குரல் கொடுத்திருக்கிறார். சஞ்சய்க்கு குரல் கொடுத்திருப்பது, சஞ்சயை போன்ற குட்டிப் பையனான அஸ்வத் பி.அஜீத்.
இவரது குடும்பமே இசைக்குடும்பம் என்பதுதான் முக்கியமான செய்தி. அப்பா அஜீத் டிரம் இசைக்கலைஞர். அம்மா வினிதா பாடகி. (ஆனந்த தாண்டவம் படத்தில் வரும் கனாக் காண்கிறேன் கனாக் காண்கிறேன் கண்ணாளனே... இவரது வாய்ஸ்தான்)
மலையாளத்தில் ஜெய்சூரியா நடித்த "கரன்சி" படத்தில் சித்தார்த் இசையில் ஒரு பாடலை பாடினேன். அப்புறம் போபி அம்பர்லா விளம்பர படத்தில் ஒரு சின்ன குரல் கொடுத்தேன். அதை கவனித்த ஜேம்ஸ் வசந்தன் சார், "பசங்க" படத்தில் "அன்பாலே அழகாகும் வீடு... " பாடலில் பாலமுரளிகிருஷ்ணா சாருடன் சேர்ந்து பாடுகிற வாய்ப்பை கொடுத்த தோடு, அந்தப் படத்தில் இடம் பெற்ற பசங்க கெளபாய் ஸ்டைலில் ஆடுவாங்களே அந்த " கூ..ஈஸ்த..." என்கிற பாடலுக்கும், "இறைவா இறைவா... உன் அன்பைதான் கேட்கிறேன்.." என்கிற பாடலுக்கும் என மூன்று வாய்ப்புகளை கொடுத்தார் ஜேம்ஸ் வசந்தன் சார். அவருக்கு என் நன்றி என்கிறார் இந்த குட்டிப் பையன்.
இப்போது நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். பியானோவில் செகண்ட் கிரேடு பாஸ் பண்ணியிருக்கேன். என்னோட குரு டேனியல் சார். அவர் எம்.எஸ்.வி. சார் இசைக்குழுவில் இருந்தவர். அவரிடம் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம் என்கிற அஜீத், விஜய் ஆன்ட்டனியுடன் இணைந்தது எப்படி?
ஐடியல் பனியன் சிங்கிள்ஸ் குரலுக்கு நான் பேசியிருந்தேன். அதற்கு விஜய்ஆண்டனி சார்தான் இசை. அவர்தான் அந்த வாய்ப்பை கொடுத்து பேச வைத்தார். அவருடைய இசையில் எங்க அம்மா வினிதா "பந்தயம்" படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தாங்க. அப்போதிலிருந்து என்னைப் பற்றி அவருக்கு தெரியும். வாய்ப்பு வரும் போது அழைக்கிறேன் என்று சொன்னவர் சொன்ன மாதிரியே "வேட்டைக்காரன்" படத்திற்கு இந்த "நான் அடிச்சா தாங்க மாட்ட.. நாலு நாளு தூங்க மாட்டே... மோதிப்பாரு... வீடு போயி சேரமாட்டே.." என்கிற வரிகளை பாடுவதற்கு வாய்ப்பு தந்தார்.
உற்சாகமாக தனது சினிமா வாய்ப்புகள் பற்றி சொல்லும் அஸ்வத் பி.அஜீத், இன்னும் சில படங்களில் பாடிக் கொண்டிருக்கிறாராம். எல்லா குட்டீஸ்களை போலவே இவரும் ஒரு விஜய் ரசிகர்!
0 comments:
Post a Comment