தூக்கத்தில் குறட்டை விடுவதால் கணவனை விவாகரத்து செய்யும் மனைவி, ருசியாக சமைக்க தெரியாததால் மனைவியை விவாகரத்து செய்யும் கணவன் ஆகியோருக்கு மத்தியில், இளம்பிள்ளை வாதத்தால் இரண்டு கால்களையும் இழந்த மனைவி மற்றும் நடைபழகும் பச்சிளம் குழந்தை ஆகியோரை தூக்கி சுமந்தபடி வலம் வருகிறார் ஒரு வட மாநில வாலிபர். சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் நிஷாந்த். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் அங்கு கூலி வேலையை பார்த்து வந்தார். திருமணம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்த அவர் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை சந்தித்தார். பல எதிர்ப்புகளுக்கு இடையே நிஷாவை திருமணம் செய்து கொண்டார். மகள் பிறந்தாள். குடும்பம் வளர்ந்தது. தனி மனிதனாக இருந்தபோது சமாளித்த நிஷாந்த் மனைவி, பிள்ளை என்று ஆனதால் கூலி தொழிலில் வந்த வருமானத்தில் அவர்கள் கால் வயிறு உணவு சாப்பிட கூட முடியாமல் தவித்தனர்.திடீரென அவர்கள் கிராமத்தில் பஞ்சம் ஏற்பட்டது. கூலி வேலை கூட கிடைக்காமல் தவித்தார் நிஷாந்த். அப்போது, அவரது நண்பர்கள், தமிழகத்தின் பெருமைகளை பற்றி கூறினர். இதையடுத்து, மனைவி குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன் ரயில் ஏறி சென்னையில் இறங்கினார்.கனவுகளுடன் சென்னை வந்த நிஷாந்திற்கு மொழி உள்ளிட்ட பல பிரச்னைகளால் எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை. வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற நிஷாந்த் பசி கொடுமையால் இறுதியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தர்மவான்கள் பிச்சையிடுவதில் கிடைக்கும் பணத்தில் மூவரும் பசியாறி மரத்தடி நிழலில் வசித்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நிஷாந்த் கூறுகையில், "உழைத்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையில்தான் சென்னைக்கு வந்தேன். ஆனால், பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டேன். என் மனைவி, குழந்தை மீது நான் அளவுகடந்த பாசம் வைத்துள்ளேன். பிச்சை எடுத்து கிடைக்கும் பணத்தில் அவர்களுக்கு முதலில் உணவு வாங்கி கொடுத்து விட்டு தான், பின் நான் சாப்பிடுவேன். கஷ்டத்திலும் மனைவி அளிக்கும் ஆறுதலான வார்த்தைகள் எனக்கு தெம்பு கொடுக்கும். அவளுக்கு கால்கள் இல்லை. வாழ்நாள் முழுவதும் அவளை நான் சுமப்பதை பெருமையாக கருதுகிறேன். விரைவில் வேலை தேடி குடும்பத்தை நல்ல முறையில் காப்பாற்றுவேன்' என நம்பிக்கையுடன் கூறினார் நிஷாந்த்.
YOGANANDHAN GANESAN
0 comments:
Post a Comment