
தமிழகத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று கடுமையாக உழைத்தீர்கள். அதன் பலனாக முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றார், என்று நடிகர் விஜய் கூறினார். சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று ரூ 8 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கிய பின் நடிகர் விஜய் பேசியதாவது:
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். அதேபோல் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். அவரின் அந்த கருத்துக்கு ஆதரவாக சேலத்தில் என்னுடைய ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டீர்கள். இந்த விழா மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். உங்களால் நான் உயர்ந்தேன். என்னைப் போன்று நல்ல நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நான் பார்க்காத தோல்விகளா...
இந்த சினிமா உலகில் நான் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், கேலி கிண்டல்களை, தடைகளை சந்தித்தேன். அதையெல்லாம் கண்டு நான் துவண்டு விடவில்லை. கடின முயற்சிகள் செய்து தொடர்ந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, தவறி விழுவது சகஜம்தான். ஆனால் விழுந்த இடத்திலேயே கிடைக்காமல், மீண்டும் துள்ளி எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்," என்றார்.
0 comments:
Post a Comment